கடந்த 2008 ஆம் ஆண்டில் இந் நாளில், இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
2008 ஜூன் 6 பாகிஸ்தான், கராச்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணிகள் மோதின.
போட்டியில் நாண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக சனத் ஜயசூரியா 114 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 125 ஓட்டங்களை எடுக்க திலகரத்ன டில்ஷான் 56 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்தியா சார்பில் ஆர்.பி. சிங் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும் சேவாக் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அஜந்த மெண்டீஸின் சுழலில் சிக்கி சின்னா பின்னமாகிப் போனது.
அதன்படி அவர்கள் 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 100 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர்.
இந்திய அணி சார்பில் வீரேந்தர் சேவாக் 36 பந்துகளில் 12 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களையும், தோனி 49 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் அஜந்த மெண்டீஸ் 8 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 13 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான சேவாக், சுரேஷ் ரய்னா, யுவராஜ் சிங், ரோகித் சர்மா உட்பட முக்கிய வீரர்களை அட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார் மெண்டீஸ்.
அணியின் ஏனைய பந்து வீச்சாளர்களான சமிந்த வாஸ் 2 விக்கெட்டுகளையும், முரளிதரன் மற்றும் குலசேகர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் அவர்களது பங்கிற்கு கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அஜந்த மெண்டீஸ் தெரிவானார்.
இது இலங்கை வெற்றி கொண்ட நான்காவது ஆசியக் கிண்ணம் ஆகும். அதன் பின்னர் இலங்கை 2013/14 இல் தமது ஐந்தாவது ஆசிய கிண்ணத்தயைும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.