இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதும் என்ற மனப்பான்மை அதிகரித்து வருகிறது.
ஆனால் மருத்துவ நிபுணர்கள் கொரோனாவிற்கு எதிரான முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற, இரண்டு தவணை தடுப்பூசி யையும் அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பரவல் சற்று குறைந்து வருகிறது. அதே தருணத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ், உருமாற்றம் பெற்று டெல்டா பிளஸ் வைரஸாக பரவி வருவதாகவும், விரைவில் இதன் காரணமாக மூன்றாவது அலை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வீசக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனாத் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களும், மிதமான பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும், தொற்று பாதிப்பு ஏற்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்களும், மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை காட்டிலும், இரண்டாவது தவணை தடுப்பூசி குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இரண்டு தவணைகளில் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகுதான் ஒருவருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் கால அவகாசம் வரை பொறுமையுடன் காத்திருந்து, இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸிற்கென பிரத்யேக ஆண்டி வைரஸ் மருந்து ஏதும் இதுவரை வரவில்லை. எனவே தற்போதைய சூழலில் தடுப்பூசி செலுத்தி கொள்வது தான் இதற்கான சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது.
டொக்டர். ஜெயஸ்ரீ.
தொகுப்பு அனுஷா.