அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இந்த மாதம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாக பிரபல ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தில் அவசர தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (06) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.