பிரிஸ்டலில் நடைபெற்ற இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணியானது, இங்கிலாந்துடன் மூன்று போட்டிகளை கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.
அதில் முதலாவதாக நடைபெற்ற டி-20 தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து, இலங்கையை வைட் வோஷ் செய்தது.
அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளினாலும், இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து.
இந் நிலையில் ஒருநாள் தொடரின் தீர்க்கமானதும், இறுதியுமான போட்டிய நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது.
இந்த தொடரின் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் நாணய சுழற்சியினை வெற்றிகொணட இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், இலங்கையை மீண்டும் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வழமைபோல் வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
இதனிடையே தசூன் சானக்க மாத்திரம் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அதனால் 41.1 ஓவர் நிறைவில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் டோம் குர்ரன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷித் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து பிரிஸ்டலை கடும் மழை பெய்ததால் இங்கிலாந்தின் இன்னிங்ஸின் ஆரம்பம் தாமதமானது. மழை வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகளைக் காட்டாதமையினால் இங்கிலாந்து ஒரு பந்து கூட துடுப்பெடுத்தாடாத நிலையில் ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இங்கிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தொடரில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக டேவிட் வில்லி தொடரின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.