கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து தெற்காசிய நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது பல பகுதிகளில் உருமாற்றம் பெற்ற டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் இதனை எதிர்கொள்ளலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் பேசுகையில்,’ தற்போது பல பகுதிகளில் பரவிவரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரஸை போன்றே இருக்கிறது. உருமாற்றம் பெற்ற டெல்டா ப்ளஸ் வைரஸ் கூடுதலாக K417N என்ற திரிபை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக டெல்டா வைரசை காட்டிலும் டெல்டா பிளஸ் வைரஸ் அதிகமாக பரவும் திறனை கொண்டிருக்கிறது. இருப்பினும் எம்முடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலை கடந்து செல்லும் திறன் இருக்கிறதா? என்ற பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் ஆகியவை ஆல்பா வைரசுடன் ஒப்பிடுகையில் அதிகளவு பரவும் தன்மை கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தொற்று பாதித்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு இரண்டு தவணையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் இவை மிக அரிதாகவே மக்களிடத்தில் காணப்பட்டது. அதே தருணத்தில் தடுப்பூசியின் திறன் 80- 90 சதவீதமாக உள்ளது. தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகள், ஆல்பா, பீட்டா, காமா மற்றும் உருமாறிய டெல்டா வகை வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.’ என்றார்.
தொகுப்பு அனுஷா