கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் தர அணியல்ல எனவும், இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் பலமான அணியாகும் எனவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தினரின் அசட்டைத் தனத்தின் காரணமாக, இந்தியாவின் இரண்டாம் தர அணியொன்று இலங்கைக்கு வந்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்த குற்றச் சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் 20 வீரர்களில் 14 பேர் இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்கனவே விளையாடியுள்ளவர்களாவர். சிலர் கூறுவதுபோல், இரண்டாம் தர அணியொன்று இலங்கைக்கு வரவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் விளையாடவுள்ளதால், மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி இலங்கைக்கு வந்துள்ளது.
உலகின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் நாடுகள், மூவகை கிரிக்கெட் போட்டிகளுக்குமென தனித்தனியான அணிகளை கட்டியெழுப்புவதில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், தற்போது வந்திருக்கும் இந்திய அணி இரண்டாம் தர அணியல்ல, அது இந்திய தேசிய கிரிக்கெட் அணியாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு அணிகளுக்குமிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளிலும், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் 21, 23 , 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.