ஜெஸ்வர் உமர், இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் (Football Sri Lanka-FSL) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற தேர்தலில் ஜெஸ்வர் 96 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோவின் மகன் டாக்டர் மானில் பெர்னாண்டோ 90 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஜெஸ்வர் இலங்கையிலும் வெளிநாட்டிலும் பல்வேறு உதைபந்தாட்ட நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர்.
இவர் இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தில் பல நிர்வாகப் பதவிகளை வகித்து வந்திருக்கிறார்.
இலங்கை உதைபந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் சர்வதேச உதைபந்தாட்டச் சங்கமான (FIFA)வின் சிரேஷ்ட ஆட்ட நடுவராகவும் (Senior Match Referee) இருந்தவர் என்பதுடன், ஆசிய உதைப்பந்தாட்டச் சங்கத்தில் (AFC) Match Commissioner ஆகவும் பதவி வகித்தார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் உமர்லெப்பை என்பவரின் மகனான ஜெஸ்வர், அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
சிறந்த உதைபந்தாட்ட வீரரான ஜெஸ்வரின் கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இந்த தலைவர் பதவியாகும்.