கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானவர்கள் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கிறார்கள்.
பலர் இதன் பாதிப்பிற்குள்ளாத வகையில் கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகளாக செலுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக இணையங்களில் செய்திகள் வெளியாயின. இதனால் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கமும், குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவ நிபுணர் அரோரா விளக்கமளித்து பேசுகையில்,’ தடுப்பூசி செலுத்தி கொண்டதால் மலட்டுத்தன்மை ஏற்பட்டதாக இது வரை ஒரு புகாரும் பதிவாகவில்லை.
தடுப்பூசிகள் முதலில் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மனிதர்களிடமும் பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்ற பிறகு தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை பரிசோதனை செய்த பிறகே அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை.
போலியோ தடுப்பு மருந்து செலுத்தும் போதும் இதுபோன்ற தவறான தகவல்கள் வதந்திகளாக பரவியது. போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மையை எதிர்கொள்வார்கள் என வதந்தி பரவியது. ஆனால் அது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. எந்த ஒரு தடுப்பூசியும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. அதனால் இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. அத்துடன் இது தொடர்பாக அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்றார்.
தொகுப்பு அனுஷா