இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு காணொளி தற்சமயம் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இலங்கை இழந்துள்ள நிலையிலும், இவர்களது இந்த பொறுப்பற்ற செயற்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த காணொளியின் நம்பகத் தன்மையை சரிபார்ப்பதற்கு இலங்கை கிரிக்கெட், அணி முகாமையாளரிடம் அறிக்கையை கோரியுள்ளது.
இந்த காணொளி பதிவனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர்,
இன்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) டர்ஹாமில் பழக்கமான முகங்கள், அவர்கள் தங்களின் சுற்றுப் பயணத்தை அனுபவிக்கின்றனர். அவர்கள் கிரிக்கெட் விளையாட இங்கே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த காணொளி ஞாயிற்றுக்கிழமை 23.28 மணிக்கு எடுக்கப்பட்டது.
இந்த கிரிக்கெட் வீரர்களின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது, ஆனால் டர்ஹாமில் தங்கள் இரவை அனுபவிக்க அவர்கள் மறக்கவில்லை.
பல இலங்கை ரசிகர்கள் செவ்வாய்க்கிழமை டர்ஹாமில் இலங்கை அணியை ஆதரிப்பதில் உற்சாகமாக உள்ளனர், மேலும் விளையாட்டைக் காண இங்கிலாந்து முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த கோமாளிகள் இலங்கை கிரிக்கெட்டிற்கும் ரசிகர்களுக்கும் சேவை செய்ய இங்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் வீரர்கள் உயிர் குமிழி மற்றும் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பது கண்டறியப்படும் என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர், வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.