ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
ஊடரங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டி.துறையில் ஷிப்டு முறையில் பணிபுரிந் தவர்கள் மடிக்கணினி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், கழுத்து மற்றும் முதுகுவலி பிரச்சினைக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாக நேரிடும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
‘ஜமா ஆன்காலஜி’ என்ற மருத்துவ இதழ் சமீபத்தில் நீண்ட நேரம் உட்காருவதற்கும், புற்றுநோய்க்கும் இடையே உள்ள தொடர்பை மையப்படுத்தி ஆய்வு முடிவை வெளியிட்டது. போதுமான நேரம் இடைவெளி எடுத்துக்கொள்ளாமல் அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இருப்பதை ஆய்வுக்குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்த அபாயத்தை தவிர்ப்பதற்கு வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். சுமார் 8 ஆயிரம் பேரின் வாழ்க்கை முறையை 4 ஆண்டுகளாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவர்களில் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாத நபர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 82 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் கூட நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதிலும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஒரு மணி நேரத்திற்கு மேலாக சைக்கிள் ஓட்டுவது போன்ற உடல் இயக்க செயல்பாடுகளை கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 31 சதவீதம் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடினமான உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்து வருவது, ஓட்டப்பயிற்சி போன்ற மிதமான பயிற்சிகளுக்கு ஒரு மணிநேரம் செலவிடுவதன் மூலம் புற்றுநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
ஊடரங்கு காலகட்டத்திற்கு முன்பு அலுவலக வேலைக்கு சென்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பயணம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்கள் என குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு இருப்பார்கள். வீட்டில் இருந்தே வேலை செய்யும் பட்சத்தில் இத்தகைய சந்தர்ப்பங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. வீட்டில் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் வழக்கமாக பின்பற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் கவனம் செலுத்தாததும் இந்த ஆய்வின்போது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.
தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு கால அட்டவணையை நிர்வகித்து அதன்படி செயல்படுவதற்கு பழக வேண்டும். போனில் பேசும்போது அங்கும் இங்கும் நடமாடுவது, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது எழுந்து அறையை சுற்றி சிறிது நேரம் நடப்பது போன்ற சிறிய நடவடிக்கைகள் உடல் நலனிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆய்வுக்குழுவினரின் கருத்தாக இருக்கிறது.