வடபழனி முருகன் கோவில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படுவதையொட்டி பக்தர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று, வடபழனிமுருகன் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலய பிரதிஷ்டை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி நடந்தது. திருப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் நடந்து வந்தன.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. வடபழனி முருகன் கோவிலிலும் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழக அரசு தற்போது அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வடபழனி முருகன் கோவில் திறக்கப்பட்டு கோவில் கோபுரம், சன்னதிகளின் விமானம் உள்ளிட்டவற்றை புனரமைக்கும் பணி, உற்சவர் சன்னதி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை வடபழனி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. காலை 6.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களை வரவேற்க நேற்று மாடவீதி முழுவதும் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, மாநகராட்சி ஊழியர்கள் பீளிச்சிங் பவுடர்கள் போட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து பிரகாரத்தில் கோலம் போட்டு, முழுவதும் சாம்பிராணி, ஊதுவர்த்தி கொழுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணிந்து வரும் பக்தர்கள், தெற்கு கோபுர வாசலில் கால்களை கழுவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. பக்தர்கள் 10 அடி சமூக இடைவெளியில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு விபூதி, உதிரி பூ, சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.