இந்தியாவின் பத்தியா நகரில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியின் மகளிருக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அஞ்சலோட்ட அணி பங்கேற்கவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டுவதற்கான இறுதித் தினமாகும். ஆகவே, இந்தியாவில் நடைபெறும் இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியானது, டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டுவதற்கு இலங்கை மற்றும் இந்திய வீரர்களுக்கான கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். இதனால் ஒவ்வொரு வீர , வீராங்கனைகளும் ஒலிம்பிக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கு கடுமையாக முயற்சி செய்வர்.
இந்நிலையில், இலங்கை மகளிர் 4 தர 100 அஞ்சலோட்ட அணியில் அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சன், மெதானி ஜயமான்ன, ஷபியா யாமிக் மற்றும் லக்சிக்கா சுகந்தி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் லக்சிக்கா சுகந்தி மேலதிக வீராங்கனையான அணியில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில், நிலானி ரட்ணாயக்க (3000 மீற்றர் தடைத்தாண்டல் வீராங்கனை), காலிங்க குமாரகே (400 மீற்றர் ஓட்ட வீரர்), சுமேத ரணசிங்க (ஈட்டில் எறிதல் வீரர்), நதீஷா ராமநாயக்க (400 மீற்றர் ஓட்ட வீராங்கனை ), நிமாலி லியனாராச்சி (800 மீற்றர் ஓட்ட வீராங்கனை) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.