ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், தனது புதிய நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘பயங்கரவாதி’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நாவலை தமிழகத்தின் ஸ்கவரி புக் பேலஸ் என்ற பதிப்பகம் வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “எனது புதிய நாவலை நிறைவு செய்து விட்டேன். ஒரு பெரும் வேட்கை இப் பிரதி. நாளாந்த பணிச்சுமை, எத்தனையோ உளத் தொந்தரவுகள் மத்தியில் இரவு பகலாக செய்த மூன்றாண்டு கால பேருழைப்பு. கனவிலும் நினைவிலுமாக நிகழ்ந்த கதையை எழுதி தீர்த்தது பெருந்தவம், பெருத்த விடுதலை. ஒரு பல்கலைக்கழக மாணவத் தலைவனின் காதலும் வீரமும் தான் கதை..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “ “’பயங்கரவாதி’ நாவல் அறிவிப்புக்கு வாசகர்கள், நண்பர்கள் தரும் வரவேற்பு பெருத்த உற்சாகமூட்டுகிறது. அந்த அறிவிப்புடன் நாவலை வெளியிடும் பதிப்பகம் பற்றியும் அறிவித்திருக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய பதிப்பகங்கள் பலவும் நாவலை பதிப்பிக்க அழைத்து வருகிறார்கள். என் முதல் நாவலான ‘நடுகல்’ நூலை பதிப்பித்த ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ பதிப்பகமே புதிய நாவலை பதிப்பிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தது. 2019இலேயே பதிப்பாளர் வேடியப்பனுடன் இதனை செய்தாகிற்று. நண்பர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் பிரியமும் நன்றியும்…” என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர் எழுதிய நடுகல் நாவல் தற்போது சிங்களத்தில் வெளியாகின்றது. ஜி.ஜி. சரத் ஆனந்த என்ற சிங்கள எழுத்தாளர் நடுகல் நாவலை மொழியாக்கம் செய்ய, கடுல்ல என்ற சிங்களப் பதிப்பகம் வெளியிடுவதாகவும் அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.