ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.
போட்டி கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட 2 ஆவது நாள் போட்டி நடைபெற்றது.
நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய, இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்னதாகவே நிறைவுக்கு வந்தது.
நேற்றுமுன்தினம் 3 ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந் நிலையில் முதல் நாள் ஆட்டம் போலவே நேற்றைய நான்காம் நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டுள்ளது.