பாகிஸ்தான் அரசின் சார்பாக, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டக் தலா 6 கோடியே 60 இலட்சம் (66, 000,000) மற்றும் 80 இலட்சத்து 27 ஆயிரத்து 300 (8,027,300.60) ரூபா 60 சதம் பெறுமதியான இரண்டு காசோலைகளை நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு கங்காரமய விகாரையில் நடைபெற்ற விழாவின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக 6 கோடியே 60 இலட்சம் ரூபா நன்கொடை வழங்குவதாக அறிவித்தமைக்கமைய இந்நன்கொடை வழங்கப்பட்டதோடு, கொவிட் -19 க்கான நிவாரண உதவியாக 80 இலட்சத்து 27 ஆயிரத்து 300 ரூபா 60 சதம் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கும் போது, இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு பாகிஸ்தான் அரசாங்கமும் பாகிஸ்தான் மக்களும் தேவைப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை மக்களுக்கும் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை மாணவர்களுக்கான 100 மருத்துவத்துறை புலமைப்பரிசில்கள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் இலங்கை மாணவர்களுக்கான 250 முழு நிதியுதவி பெற்ற அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்கள் குறித்தும் உயர் ஸ்தானிகர் ஜனாதிபத்திற்கு விளக்கப்படுத்தியதோடு தகுதியான இலங்கை மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய மற்றும் மதிப்புக்குரிய விருந்தினராக கலந்து கொண்ட கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமய விகாரை தலைமை பிக்கு கலாநிதி கிரிந்தே அசாஜி நாயக்க தீரோவுக்கு உயர் ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இவ்விழாவில் கலாநிதி அசெலா விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.