ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை குவித்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது.
மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது நிறுத்தப்பட, இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணித் தலைவர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வுசெய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்து.
இந் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று ஆம்பித்த சிறிது நேரத்திலேயே விராட் கோலி 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த ரிஷாப் பந்த் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ஓட்டங்களில் ஆட்டமிழக்க நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
இறுதியில் இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ரஹானே மாத்திரம் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை எடுத்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும், டிம் சவுதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.
டொம் லெதம் மற்றும் டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஓட்ட எண்ணிககை 70 ஆக இருக்கும்போது லெதம் 30 ஓட்டங்களில் அஷ்வினின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் பிடிகொடுத்தார். அவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் கைகோர்த்த கான்வே அரை சதம் விளாசினார்.
எனினும் அவர் 54 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் மொஹமட் ஷமியிடம் பிடிகொடுத்து வெளியேற, ரோஸ் டெய்லர் களமிறங்கினார்.
அதன்பின் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை எடுத்திருந்தது.
வில்லியம்சன் 12 ஓட்டங்களுடன் டெஸ்லர் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.