இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே அரிதான மற்றொரு நோய் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வைத்திய நிபுணர்கள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நோய் நிலைமை – சிறுவர்களிடையே மல்டிசிஸ்டம் அழற்சி நோய்க்குறி என அழைக்கப்படுகின்றது என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் ஆலோசகர் சிறுவர் மருத்துவ நிபுணர் நலின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே 2 – 6 வாரங்களுக்குப் பிறகு இந்த நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
தற்போது இந்த நோய் அறிகுறிகளுடன் குறித்த சிறுவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் 8 – 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் தீவிரம் என்னவென்றால், இந்த நோய் இருப்பது உடனடியாக வெளிப்படாது.
இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே காய்ச்சல், கடுமையான உடல் வலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தோன்றலாம்.
அத்தோடு சொறி, கண்கள் அல்லது தோல் வெடிப்புகளில் சிவத்தல் அறிகுறிகளும் ஏற்படலாம்.
இந்த நோய் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இறுதியில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
மேற்கூறிய அறிகுறிகள் சிறுவர்களுக்கு ஏற்படுவது தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுவர்களை மிக அரிதாகத் தாக்கும் இந்த நோய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் முதன் முதலில் இனங்காணப்பட்டது.
2020 மார்ச் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் 250 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இடையே இந்தப் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகின் பல பகுதிகளிலும் இது போன்ற நோய் அறிகுறிகள் சிறுவர்களிடையே பதிவாகியுள்ளன” – என்றார்.