நேபாளம் முழுவதும் இந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரு இந்தியரும், இரண்டு சீனத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் 25 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தியுள்ளனர்.
காத்மாண்டுவின் வடகிழக்கில் சிந்துபால்சோக் மாவட்டத்தில் உள்ள மெலம்ச்சி நகருக்கு அருகே மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜைகள் குடிநீர் திட்டத்தை உருவாக்கும் ஒரு சீன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்று மாவட்ட அதிகாரி பாபுரம் கானல் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டெம்பர் வரை நீடிக்கும் பருவமழை, ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொல்கிறது.
செவ்வாய்க்கிழமை முதல் பெய்த பலத்த மழையால் வீதிகள் சேதமடைந்துள்ளன, பாலங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன, மீன் பண்ணைகள் மற்றும் கால்நடைகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாடசாலைகள், கொட்டகைகள் மற்றும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.