இந்திய புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின். இடைக்காலத் தலைவரான திருமதி சோனியா காந்தி, மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருக்கும் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். அதன் போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும், மக்களவை உறுப்பினருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மு க ஸ்டாலின் தனது துணைவியாருடன் சந்தித்தார். அதன் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் உடனிருந்தார். அதன் பின்னர் மு க ஸ்டாலின் புதுடில்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய சுட்டுரையில்,’ வளமான மாநிலமாக தமிழகத்தை மாற்ற தி.மு.கவுடன், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அயராது பாடுபடும்’ என பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக மு க ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த போது, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, புத்தகங்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.