இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலும், யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள மாளிகை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியத் தூதுவருக்கு நேற்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியபோது, அவர்களைக் கையாள்வது எப்படி என எங்களுக்குத் தெரியும் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பதிலளித்துள்ளார்.
கீரிமலையில் தனியார் காணிகளைக் கையகப்படுத்தி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அமைக்கப்பட்ட கீரிமலை மாளிகை தொடர்பான ஆவணங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்.
இதனோடு இணைந்ததாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் உள்ளிட்டவற்றை விலாவாரியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
இதன்போது ஒரு கட்டத்தில் இந்தியத் தூதுவர், “அவர்களைக் கையாள்வது எப்படி என எங்களுக்குத் தெரியும்?” என்று பதிலளித்தார். இதன் பின்னர் அந்த விடயம் பேசப்படவில்லை.