யூரோ கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேட்ஸ் ஹம்மல்ஸ் அடித்த சுய கோல் காரணமாக ஜெர்மனி அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை.
யூரோ கால்பந்து தொடரில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி – பிரான்ஸ் அணிகள் முனிச் நகரில் நேற்று மோதின. 15-வது நிமிடத்தில் அன்டோனி கிரீஸ்மான் அடித்த கிராஸை பால் போக்பா தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேல் சென்று ஏமாற்றம் அளித்தது.
20-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பால் போக்பா கடத்தி கொடுத்த பந்தை லூகாஸ் ஹெர்னாண்டஸ் கோல் வலைக்கு அருகே நின்ற கிளியான் பாப்பேவுக்கு கிராஸ் செய்தார். இதை ஜெர்மனி வீரர் மேட்ஸ் ஹம்மல்ஸ் இடைமறித்து விலக்கிவிட முயன்றார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு கோல் வலையை துளைத்தது. அவர் அடித்த இந்த சுய கோல் காரணமாக பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
66-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே, ஜெர்மனி அணியின் தடுப்பாட்டக்காரர்களுக்கு ஊடாக பந்தை லாவகமாக கடைந்து எடுத்துகோல் அடித்தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. 70-வது நிமிடத்தில் ஜோஸ்வா கிம்மிச் அடித்த கிராஸை பெற்ற அன்டோனியா ரோடிகர் இலக்கை நோக்கி தலையால் முட்டிய போது பிரான்ஸ் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 85-வது நிமிடத்தில் பிரான்ஸின் கரீம் பென்சீமா அடித்த கோலும் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பிரான்ஸ் மேல்முறையீடு செய்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை. முன்னதாக எஃப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான போர்ச்சுக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கோல்கள் வித்தியாசத்தில் அந்த அணி முதலிடத்திலும், பிரான்ஸ் 2-வது இடத்திலும் உள்ளன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யா 1-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்தை வீழ்த்தியது.