பப்ஜி மதனை பிடிப்பதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார்.
இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி இந்த புகாரை அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவரது யூடியூப் சேனலையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பெண்களுடன் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியது தெரிய வந்தது.
பெண்களிடம் அந்தரங்க விஷயங்களையும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோக்களையும் யூடியூப் சேனலில் மதன் தொடர்ந்து பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.
அதே போன்று தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டையும் அவர் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். சிறுவர்கள் பலர் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி இருந்தனர்.
இதையடுத்து பப்ஜி மதனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் சென்னை வேங்கைவாசலில் வசித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
என்ஜினீயரிங் பட்டதாரியான பப்ஜி மதனின் முழு பெயர் மதன்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர் தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து யூடியூப் சேனல்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா முக்கிய மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
பப்ஜி மதனை பிடிப்பதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பப்ஜி மதன் பெண்களுடன் பேசிய புதிய ஆடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் என்னை பிடிக்க முடியுமா? என்று போலீசுக்கு அவர் சவால்விட்டு இருந்தார். அந்த ஆடியோவில் பேசிய பெண் யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதனின் யூடியூப் சேனலுக்கு 8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பப்ஜி மதன் கேர்ள் பேன், ரிச்சி கேமிங் ஆகிய யூடியூப் சேனல்களில் பெண்களுடன் மதன் நீண்ட நேரம் ஆபாசமாக உரையாடி இருக்கிறார். இதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டி உள்ளனர்.
பெண்களை கவரும் வகையிலான இந்த யூடியூப் சேனல்களுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகமாவதற்கு மதனின் மனைவி கிருத்திகா முக்கிய பங்காற்றி உள்ளார்.
சில நேரங்களில் அவரே கிளுகிளுப்பாக பெண்களிடம் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். யூடியூப் சேனலுக்கான அனைத்து பணிகளையும் கிருத்திகாவே முன் நின்று செய்துள்ளார். யூடியூப் சேனல்களின் அட்மினாகவும் அவர் இருந்துள்ளார்.
கிருத்திகா மூலமாக மேலும் பல பெண்களும் மதனுடன் ஆபாசமாக உரையாடி இருக்கிறார்கள். அந்த பெண்கள் யார், யார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற ஆடியோ உரையாடல்களால் சப்ஸ்கிரைபர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து மதன் அடுத்தடுத்து பெண்களை கவரும் வகையிலான ஆடியோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் மதன் சம்பாதித்துள்ளார். மாதம் ரூ.12 லட்சம் வரையில் மதனுக்கு வருவாய் வந்துள்ளது. இப்படி லட்சம் லட்சமாக சம்பாதித்த பணத்தை பெறுவதற்காக பல்வேறு வங்கிக் கணக்குகளையும் மதன் தொடங்கி உள்ளார்.
சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க அதிகரிக்க மதனின் வாழ்க்கையில் பண மழை பெய்துள்ளது. இதை வைத்து ஆடம்பரமாக அவர் வாழ்ந்துள்ளார். 2 சொகுசு கார்களில் அவர் வலம் வந்து இருக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தக்கூடிய ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ. கார்களை மதன் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கிடையே வேங்கை வாசலில் உள்ள மதனின் வீட்டில் இருந்து செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் உள்ள பல தகவல்களை ஆதாரங்களாக போலீசார் திரட்ட திட்டமிட்டுள்ளனர்.
மதனின் மனைவி கிருத்திகா கைக்குழந்தையோடு கைதாகி இருக்கிறார். மனைவி போலீசில் சிக்கிய பிறகும் மதன் சரண் அடையவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார்.
மதனின் யூடியூப் சேனலில் இருக்கும் புகைப்படங்கள் அவர் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மதன் தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.