ஏமன் நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதனால், அந்நாட்டில் இருந்து பலரும் கடல் வழியாக சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு கடல்வழியாக தப்பிச்செல்கின்றனர்.
அதேபோல், சோமாலியா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளுக்கு பலர் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின்போது படகுகள் விபத்துக்கு உள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமார் 200 அகதிகள் ஒரு படகு மூலம் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய அரபிக்கடலில் பயணம் செய்துள்ளனர்.
ஏமன் நாட்டின் லஹீஜ் மாகாணத்தில் அமைந்துள்ள டிஸ்புடி கடல்பகுதியில் நேற்றுமுன்தினம் அகதிகள் படகு வந்தபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், படகில் பயணம் செய்த 200 அகதிகளும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து நடைபெற்ற மணி நேரங்களுக்கு பின்னர் ஏமன் கடற்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் படகு ஒன்று விபத்து நடைபெற்ற பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் மட்டும் கடலில் மிதந்துகொண்டிருந்தன. எஞ்சிய உடல்கள் கடல்நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்களையும் மீட்ட மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர்.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டத்தை தொடர்ந்து படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் கடலில் மூழ்கி உயிரிழந்த எஞ்சியோரின் உடல்களை தேடி வருகின்றனர்.