கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட தாஜ்மஹால் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2020 மார்ச் 17 ஆம் திகதி தொற்றுநோயின் முதல் அலையின் போது மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 21, அன்று பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும் அதன் பின்னர் இந்தியாவில் கொவிட்-19 தொற்று இரண்டாம் அலையின் காரணமாக உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான தாஜ்மஹால் இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி மீண்டும் மூடப்பட்டது.
இந் நிலையிலேயே இன்று புதன்கிழமை தாஜ்மஹால் மீண்டும் கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் வருகை தரும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:
- அனைத்து கொவிட்-நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு கட்டத்தில் 650 பேர் மட்டுமே நினைவுச்சின்னத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து நேரங்களிலும் கூட்டத்தை கண்காணிக்க படையினர் நிறுத்தப்படுவார்கள்.
- தாஜ்மஹால் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமி நீக்கம் செய்யப்படும்.
- இணையத்தளம் / தொலைபேசி வாயிலாக முன்பதிவு மேற்கொண்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படும். ஒரு தொலைபேசி எண் வழியாக ஐந்து டிக்கெட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். வளாகத்தில் எந்த டிக்கெட் கருமபீடங்களும் திறக்கப்படாது.
- அனைத்து பார்வையாளர்களும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதுடன், நினைவுச்சின்னத்தின் வாயில்களில் வெப்பத் திரையிடப்படும்.
- பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நினைவுச்சின்னத்திற்குள் எந்த பொருளையும் தொட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்கள் சொந்த தண்ணீர் போத்தல்கள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஜூன் 16 முதல் அனைத்து மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தளங்களை மீண்டும் திறக்க திங்களன்று அனுமதித்தது.
இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,693 நினைவுச்சின்னங்கள் மற்றும் 50 அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.