தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவித்த போது,
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதி எமக்கு வழங்கப்படவில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் விளையும் மரக்கறி வகைகளை பாரிய வாகனங்களில் தென்பகுதிக்கு கொண்டு செல்பவர்களிற்கே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இங்கு மரக்கறிவகைகள் தட்டுப்பாடாகவே உள்ளது.
அத்துடன் இங்கிருந்து எடுத்துச்செல்லப்படும் மரக்கறிகளிற்கு தம்புள்ளை சந்தையில் சரியான விலை கிடைப்பதிலும் பிரச்சனை இருக்கின்றது.
நாங்கள் இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றோம். வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் கேட்டபோது,
பாஸ் அனுமதியினை பெற்றுச்செல்பவர்கள் இங்கு விளையும் மரக்கறிகளை ஏற்றிச்செல்லாமல் வெளிமாவட்டங்களில் உள்ள மரக்கறிகளையே கொள்வனவுசெய்து இங்கு கொண்டு வருகின்றனர். இதனால் எமது மாவட்டத்தில் மரக்கறிகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பலருக்கு நாம் பாஸ் வழங்கிய நிலையில் நகரில் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.
இதனால் வெளிமாவட்டத்திற்கு செல்வதற்கு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புகொண்டு ஏனைய வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்யமுடியும். என்றார்.