நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் பல்வேறு அடிப்படைகளில் ஐந்து வருடங்களுக்கு அதிககாலம் சேவையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் பல்வேறு அடிப்படைகளில் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கும் அதிக காலம் சேவையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக தற்பொழுது சபையில் காணப்படும் வெற்றிடங்கள், அதற்கமைய சேவை மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் திறைசேரியின் அனுமதியைப் பெறவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கும்போது எந்த ஒரு ஊழியருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுக்க இருக்கின்றோம். 2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் பாரிய திட்டத்தை நாடு பூராகவும் செயற்படுத்த வேண்டி இருக்கின்றது. அதற்காக பாரியளவிலான ஊழியர்கள் தேவை இருக்கின்றது.
இந்த செயற்பாடுகளுக்காக அதிகளவிலான உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதால் இதன் போது ஏற்படும் ஊழியர் தேவைக்காக புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ளாமல் ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.
இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சுத்திகரிப்பு நிலையங்கள், வாடிக்கையாளர் சேவை, பராமரிப்பு சேவை போன்ற சேவை பிரிவுகளில் நிரந்தர ஊழியர்கள் அதிகளவில் இருக்கவேண்டும். அதனால் ஐந்து வருட சேவையிலுள்ள ஊழியர்களை நிரந்தரம் ஆக்குவதில் எந்தவித சிக்கல்களும் இல்லை என நம்புகின்றேன்.
மனிதவள சேவைத் திட்ட ஊழியர்களின் உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ள. இது தொடர்பாக கவனம் செலுத்தி இருக்கின்றேன். எதிர்காலத்தில் தற்காலிக தேவைகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யும் போது முறையான சேவை பொறிமுறையொன்றை செயல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.