அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எனினும் பிரியா – நடேஸ் குடும்பத்தை குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு மீண்டும் அனுமதிப்பதற்கு பதிலாக, மேற்கு நகரமான பெர்த்தில் சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரியா – நடேஸ் ஆகியோரின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் பிரியா – நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சிகிச்சையளிக்கப்படாத நிமோனியாவின் விளைவாக உருவாகியதாகக் கருதப்படும் கடுமையான இரத்தத் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, தந்தையும், சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில், குறித்த குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.