தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை.
– என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ். கந்தரோடையில் உள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகங்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவுக்குள் இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாங்கள் ரெலோவுடன் பல தடவைகள் பேசியுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் எமக்கான நேரப் பங்கீடு என்பது பல வருடங்களாகப் பிரச்சினைகளுக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் என்பது அரிதாகவே கிடைக்கின்றது. அதுவும் கஷ்டப்பட்டுப் பெறவேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு பேசிய பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக முடிவை நாம் எடுப்போம்.
எங்களுக்கு வாக்களித்த மக்கள் மத்தியிலே எம் மீது தப்பான அபிப்பிராயமொன்று காணப்படுகின்றது. நாம் நாடாளுமன்றில் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லை என அவர்கள் நினைக்கின்றனர். ஆகவே, இந்த விடயத்தில் கவனமெடுத்துச் செய்ய வேண்டிய தேவையுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமான பேச்சாளரோ அல்லது கொறடாவோ இல்லை. உத்தியோகப்பற்ற வகையிலேயே அவை செயற்படுகின்றன. இவற்றைச் சீர்செய்யுமாறு சம்பந்தனிடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். ஆனாலும், அவை சீர்செய்யப்படவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் உருவாகின்றன – என்றார்.