தமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில் பட மாளிகைகள் மூடப்பட்டிருப்பதால் டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகின. தமிழைப் பொருத்தவரை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் டிஜிட்டல் தளங்கள் புதிதாக அறிமுகமாகி ஏராளமான வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டிருக்கிறது.
சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 போன்ற டிஜிட்டல் தளங்களும் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சுவராசியமான அம்சங்களுடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் ‘சோனி லிவ்’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் தமிழில் அறிமுகமாகிறது.
ஜூன் மாதம் 25 ஆம் திகதியன்று அறிமுகமாகும் இந்த புதிய டிஜிட்டல் தளத்தில் முதல் திரைப்படமாக பல விருதுகளை வென்ற ‘தேன்’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற திரைப்படமும், ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாரான ‘நரகாசுரன்’ என்ற திரைப்படமும் வெளியாகிறது.
தற்போதைய சூழலில் பட மாளிகைகள் திறப்பதற்கும், ரசிகர்கள் கொரோனா பயமின்றி வருவதும் சாத்தியமில்லாததால் புதிதாக அறிமுகமாகும் டிஜிட்டல் தளத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.