இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் நைஜீரிய அரசு அதிகாரபூர்வ கணக்கை ஆரம்பித்துள்ளது.
1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி ஜனாதிபதி முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அதை அதிபரின் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு டுவிட்டருக்கு தடை விதித்தது.
டுவிட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் டுவிட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்தது.
தடையை மீறி டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு வழங்கியுள்ளதோடு, ‘சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார்.
இந்நிலையில், டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரிய அரசு அதற்கு பதிலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.
’கூ’ செயலியில் நேற்றுமுன்தினம் நைஜீரிய அரசின் அதிகாரப்பூர்வ தொடங்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி ’கூ’ மூலமாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ’கூ’ செயலி மூலம் அரசின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை நைஜீரிய அரசு பகிர்ந்து வருகிறது. இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 வருடங்களுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது.