செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இது குழந்தை பாக்கியம் அருளும் சிறந்த தலமாக கருதப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரச பிரதிநிதியாக இருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜன் என்பவரால், 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, தாயார் சன்னிதி என பல அம்சங்களுடன் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே ஒரு சிறிய சன்னிதியில் பக்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், விட்டலர் கோவிலை பார்த்தபடி காட்சி தருகிறார்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்தானலட்சுமி தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்து, விட்டலர் சன்னிதியில் தரும் சந்தாகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை உச்சரித்து, விட்டலனையும் தாயாரையும் மனதால் வழிபட குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.
கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் – திருக்கழுக்குன்றம் வழித்தடத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தடத்தில் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்பாக்கம் மற்றும் நெரும்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தும் இக்கோவிலை அடையலாம்.
சென்னை -புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச் சாலைத் தடத்தில் மாமல்லபுரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து வலது புறச்சாலையில் திரும்பினால் இரண்டு கிலோமீட்டரில் விட்டலாபுரம் சென்றுவிடலாம்.