எம்மில் பலருக்கு கொரோனாத் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு மருத்துவர்கள் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்கள்.
அறிகுறிகள் ஏதுமில்லாத கொரோனா நோயாளிகள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஆறு நிமிட நடை பயிற்சியை மேற்கொண்டு, பிறகு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வது போன்ற பொதுவான மருத்துவ தற்காப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறைவான மற்றும் மிதமான தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆறு நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டு ஓக்சிஜன் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, கைகளை தூய்மையாக வைத்திருப்பது, சமூக இடைவெளியுடன் இருப்பது போன்ற மருத்துவ நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை நாடித்துடிப்பு, இரத்த அழுத்த அளவு, ஓக்சிஜன் அளவு, உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் மிதமான காய்ச்சலோ அல்லது குறைவான சளியோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்போது சிலருக்கு சளியும், இருமலும் அதிகரித்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஓஸ்துமா இன்ஹேலரை பயன்படுத்தலாம்.
தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகள் வைத்தியசாலைக்கு சென்று தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறவேண்டும். அதன்போது கை விரல்களில் பொருத்தப்பட்டிருக்கும் பல்சி ஓக்சி மீற்றர் மூலம் ஆறு நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு ரத்த ஓக்சிஜன் அளவை அளவிட வேண்டும். சிலர் இந்த தருணத்திலும் வீட்டில் இருந்தால், அவர்களின் ஓக்சிஜன் அளவு 94 என்ற எண்ணிக்கை குறைந்தாலோ, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்துவிட்டு, வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மேலும் இத்தகைய பரிசோதனையை 6 மணி முதல் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தீவிர பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகள் சி பி சி எனப்படும் ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சி ஆர் பி எனப்படும் புரத பரிசோதனை, சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்திறனை கண்டறியும் பரிசோதனை, ரத்த உறைதல் தொடர்பான பரிசோதனை, D-timer, LDH, CPK உள்ளிட்ட ரத்தத்தில் கிருமிகளின் தாக்கம் அல்லது செயல்பாடு குறித்த பரிசோதனை, இந்த பரிசோதனை சிலருக்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் கழித்து மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தால், அவர்கள் அதனையும் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரையுடன் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய நடைமுறைகளை மேற்கொண்டு மனதில் திடமான நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.
டொக்டர் ஸ்ரீதேவி.
தொகுப்பு அனுஷா.