மத்திய அரசு எதிர்க்காத அளவுக்கு வடக்கு, கிழக்கில் அமையும் மாகாண சபைகள் ஊடாக நாம் அனைவரும் இணைந்து நினைவுகூர்தலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பது காலத்தின் தேவையாகவே அமைகின்றது.
என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
யாழ். பொதுசன நூலகம் எரித்த 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க நேற்றுப் காவற்துறையினர் தடை விதித்தமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
மே 19ஐ எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதனை போர் வெற்றி விழாவாகப் பிரகடனப்படுத்திச் செய்கின்றது.
வடக்கும், கிழக்கில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம், யாழ்.பொதுசன நூலக எரிப்பு போன்ற விடயங்களை நினைவுகூர்வதற்கு சரியான கட்டமைப்பு இல்லை.
அவ்வாறான கட்டமைப்பை எதிர்காலத்திலேனும் உறுதியாகவும் சட்டரீதியாகவும் உருவாக்க வேண்டும். தற்போது அதற்காக உள்ள ஒரே ஒரு வழி மாகாண சபை என்றே நான் நம்புகின்றேன்.
கடந்த காலத்தில் நாம் மாகாண சபையை இறுக்கமான கட்டமைப்பில் கொண்டு போகவில்லை என்பது குறைபாடாகவே உள்ளது.
எதிர்காலத்திலேனும் இந்த விடயங்களைச் சிறப்பாகக் கையாண்டு மத்தியில் அமையும் – அரசு எதிர்க்காத அளவுக்கு வடக்கு, கிழக்கில் அமையும் மாகாண சபைகள் ஊடாக நாம் அனைவரும் இணைந்து நினைவுகூர்தலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பது காலத்தின் தேவையாகவே அமைகின்றது.
ஒரு சிலரேனும் சுகாதார முறைகளைப் பின்பற்றி நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுமதித்திருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – என்றார்