பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா’ என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.