கொரோனாத் தொற்று பாதிப்பை கண்டறிவதற்கு இந்திய விஞ்ஞானிகள் புதிய பரிசோதனை முறையை கண்டறிந்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் அமையப்பெற்றிருக்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாவது….
‘ கொரோனாத் தொற்று பாதிப்பை கண்டறிய நோயாளிகளில் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியதிருக்கிறது. இது நோயாளிகளுக்கு அசௌகரியத்தை தருவதாக உள்ளது.
மேலும் இதனை பரிசோதனை மையத்துக்கு எடுத்துச் செல்லவும், முடிவு தெரியும் கால அவகாசம் பிடிக்கிறது.
இந்நிலையில் உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து அதன் மூலம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் முறையை கண்டறிந்திருக்கிறோம். இது எளிதாகவும் உள்ளது. கொரோனாத் தொற்று பாதிப்பின் முடிவுகளை மூன்று மணி நேரத்தில் கண்டறிய முடியும்.’ என தெரிவித்துள்ளனர்.
கொரோனாத் தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுமைக்கும் பரிசோதனை கட்டமைப்புகள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எளிதான விரைவில் முடிவை அறியக்கூடிய இத்தகைய பரிசோதனை முறை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இத்தகைய முறையில் கிராமப்புற மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கும் எளிதானது என்பதால், இத்தகைய பரிசோதனை பொருத்தமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.