மத்திய அரசின் தகவலின்படி, முதல் அலையின்போது 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் பாதிப்பு விகிதம் 31 சதவிகிதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், “கொரோனா முதல் அலையுடன், இரண்டாம் அலையை ஒப்பீடும்போது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இரண்டாம் அலையில் இளைஞர்கள் பாதிக்கப்படுவது சற்று உயர்ந்துள்ளது. இளைஞர்கள் தேவையின்றி வெளியே செல்வது அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும்போது அலட்சியமாக முகக்கவசம் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செல்வது, மற்றும் நாட்டில் சில புதிய உருமாறிய கொரோனா வகைகளும்தான், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவ காரணம்” என்கிறார்.