நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்த நான் இன்று. உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற ஊரில் மே 25ம் தேதி பிறந்தவர். நடிப்பின் மேல் இருந்த ஆசை காரணமாக சென்னைக்கு வந்து தங்கி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் நடிக்கும் போது அவர் அடிக்கடி கவுண்டர் (counter) கொடுப்பது பழக்கமாம். அதனால் நாடக உலகில் அவரை கவுண்டர் மணி என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு காட்சியில் அவரை டிரைவராக நீங்கள் பார்த்திருக்கலாம். உற்று கவனித்தால்தான் அது கவுண்டமணி என்று உங்களால் கண்டுபிடிக்க முடியும். சிறிய சிறிய கதாபாத்திரங்களில் கருப்பு வெள்ளைப் படங்கள் சிலவற்றில் நடித்தார்.
அவரை சரியாக அடையாளம் கண்டு தன் 16 வயதினிலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தவர் பாரதிராஜா. அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பாக்யராஜ் பணிபுரிந்தார். இப்படத்தில் இவர் பேசி நடித்த பத்த வச்சுட்டயே பரட்ட என்ற வசனம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
படத்தின் டைட்டிலுக்காக பெயர் எழுதித் தரும் போது பாக்யராஜ் கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்துவிட்டாராம். பாரதிராஜா அழைத்து அவரை கவுண்டர் மணி என்றுதான் கூப்பிடுவார்கள், நீ கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்துட்டியே என்று கேட்டாராம். டைட்டிலில் கவுண்டமணி என்று வந்ததால் பின்னர் அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது. சிலர் அதை சாதிப் பெயர் என்று கூட நினைத்திருக்கிறார்கள்.
அதன்பின் தொடர்ந்து வந்த கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், சுவரில்லாத சித்திரங்கள், போன்ற படங்களில் இவருக்கு குறிப்பிடும்படியான கதாபாத்திரங்கள் கிடைக்க தமிழ் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார்.
மற்றொரு நகைச்சுவை நடிகரான செந்திலோடு இணைந்து இவர் அமைத்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன. ஹாலிவுட்டின் லாரல்-ஹார்டி ஜோடியை போல் கோலிவுட்டின் லாரல்-ஹார்டி எனும் அளவுக்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பிண்ணி பிணைந்திருந்தது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் 1989-ஆம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரனின் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ காமெடி ஒன்று போதும் இவர்களின் நகைச்சுவை நடிப்பிற்கு.
80 – 90களில் வந்த தமிழ் திரைப்படங்களில் இந்த இருவரின் நகைச்சுவை காட்சிகள் இல்லாத திரைப்படமே இல்லை எனும் அளவுக்கு இருந்தது. வைதேகி காத்திருந்தாள், நாட்டாமை, கரகாட்டக்காரன், தாலாட்டு கேக்குதம்மா, சின்ன கவுண்டர் என்று இந்த கூட்டணியின் நகைச்சுவை பயணம் தொடர்ந்திருந்தது. முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா போன்ற திரைப்படங்களில் இவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் குணசித்திர வேடமேற்றும் நடித்திருக்கும் நடிகர் கவுண்டமணி ஏறக்குறைய 310 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது நிச்சயம்.
கவுண்டமணி நடிப்பில் வெளிவந்த சில முக்கிய திரைப்படங்கள்
1. 16 வயதினிலே
2. கிழக்கே போகும் ரயில்
3.சிகப்பு ரோஜாக்கள்
4. புதிய வார்ப்புகள்
5. சுவரில்லாத சித்திரங்கள்
6. கல்லுக்குள் ஈரம்
7. குடும்பம் ஒரு கதம்பம்
8. நெஞ்சிலே துணிவிருந்தால்
9. நெற்றிக்கண்
10. ஆனந்தராகம்
11. பயணங்கள் முடிவதில்லை
12. இளஞ்ஜோடிகள்
13. வாலிபமே வா வா
14. அடுத்த வாரிசு
15. காதல் ஓவியம்
16. மலையூர் மம்பட்டியான்
17. தூங்காதே தம்பி தூங்காதே
18. ஆனந்த கும்மி
19. கொம்பேரி மூக்கன்
20. நான் பாடும் பாடல்
21. உன்னை நான் சந்தித்தேன்
22. வைதேகி காத்திருந்தாள்
23. ஜப்பானில் கல்யாணராமன்
24. இதயக்கோயில்
25. கன்னிராசி
26. நானே ராஜா நானே மந்திரி
27. பகல்நிலவு
28. பணம் பத்தும் செய்யும்
29. உதயகீதம்
30. மருதாணி
31. ஈட்டி
32. கீதாஞ்சலி
33. டிசம்பர் பூக்கள்
34. ஆயிரம் பூக்கள் மலரட்டும்
35. மிஸ்டர் பாரத்
36. பிறந்தேன் வளர்ந்தேன்
37. தர்மபத்தினி
38. பேர் சொல்லும் பிள்ளை
39. நினைவே ஒரு சங்கீதம்
40. கரகாட்டக்காரன்
41. பொன்மனச் செல்வன்
42. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
43. உலகம் பிறந்தது எனக்காக
44. மை டியர் மார்த்தாண்டன்
45. நடிகன்
46. சின்ன தம்பி
47. சேரன் பாண்டியன்
48. பிரம்மா
49. மன்னன்
50. சின்னக் கவுண்டர்