முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய ஒரு கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளது
இதன் விளைவாக நேற்று மாலை வரையான தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 447 பேர் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுடன் தொடர்புகளை பேணிய 554 குடும்பங்களைச் சேர்ந்த 2205 பேர் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 17-05-2021 முதல் இன்றுவரை புதுக்குடியிருப்பு காவற்துறை பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளும் முள்ளியவளை காவற்துறை பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளுமாக 11 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது
இந்நிலையில் 21 ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட 54 கிராம அலுவலர் பிரிவுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்ட்டபோதும் தொடர்ந்தும் முடக்கப்பட்ட பகுதிக்குள் அடங்கும் புதுக்குடியிருப்பு நகர் பகுதி வர்த்தக நிலையங்கள் சந்தை வளாகம் என்பன முடங்கி காணப்பட்டன
இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி தற்போது நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டு இருக்கின்ற பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும் வேளையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதான சந்தை உள்ளிட்ட கடை தொகுதிகளைத் திறக்கும் நோக்கத்தோடு குறித்த பகுதி இன்று இராணுவத்தினரால் முற்றுமுழுதாக சுத்திகரிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது
புதுக்குடியிருப்பு நகர வர்த்தக நிலையங்கள் சந்தை வளாகம் வங்கிகள் எங்கும் தொற்று நீக்கிகள் விசிறப்பட்டன
இந்த செயற்பாடுகளை முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பார்வையிடனர் இங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மக்களுடைய நலன்களை கருதி தாம் தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலம் மாத்திரமே இந்த கொரோனாவில் இருந்து விடுபட முடியும் எனவும் மக்களை விழிப்பாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்