தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலன்கருதி இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளைத் திறக்கவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 21 அன்று ஒரேநாளில் புதிதாக 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனும், சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாகக் கலந்து ஆலோசித்தார். அப்போது, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி ஆலோசனைகள் வழங்கினர். இதையடுத்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 24 முதல் மேலும் ஒரு வாரக் காலத்துக்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றித் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பால், குடிநீர், நாளேடுகள் ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்படும்.
காய்கறிகள், பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலம் சென்னையிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரியக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மின் வணிகச் சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்கள் வழங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற மின்வணிக நிறுவனங்கள் மூலம் உணவுகளை டெலிவரி செய்யவும் அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏ.டி.எம். சேவைகள் அனுமதிக்கப்படும்.
வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், இன்றியமையாப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், இன்றியமையாப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது மக்கள் நலன் கருதி, இன்று இரவு 9 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மால்கள் திறந்திட அனுமதி இல்லை.
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்றும் நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
இன்றும் நாளையும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இரு நாட்களுக்குச் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1500 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3000 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கைக்குத் தக்கபடி தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குக் கடைசியாகப் புறப்படும் பேருந்துகளின் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.