இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி இரத்து செய்யப்பட்டது.
இதை ஈடுகட்டும் வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
கடந்த வருடம் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கூடுதல் போட்டிகள் நடத்தினால் தொலைக்காட்சி உரிமை மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கேட்டுக்கொண்டது. இந்தியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கை – இந்தியா தொடரில் கூடுதலாக இரண்டு போட்டிகள் நடத்தபடவுள்ளது.
தென்னாபிரிக்க அணி ஆகஸ்ட் மாதமும், ஸ்கொட்லாந்து அணி செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் அணி நவம்பர் மாதமும் இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.
அப்போதும் கூடுதல் போட்டியில் விளையாட வலியுறுத்துவோம் என இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.