ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2021/2022 ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இறுதித் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுத்தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் சூம் முறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
2021/2022 ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான புதிய ஒப்பந்தத்துக்கு கையெழுத்திடும் இறுதித் திகதி (20.05.2021) இன்றாகும். எனினும், தேசிய கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ள பல கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ளதால் அவர்கள் நாடு திரும்பியதும் ஒப்பந்தத்தை வாசித்துப் பார்த்து கையெழுத்திடலாம் என அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.
தேசிய கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை கருத்திற்கொண்டு தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2021/2022 ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான புதிய ஒப்பந்தத்தை, அரவிந்த டி சில்வா தலைமையிலான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவினர் தயாரித்திருந்தனர். இதன்படி ஏ1, ஏ2,ஏ3, பீ1, பீ2, பீ3,சீ1,சீ2,சீ3, டி1,டி2,டி3 ஆகிய 12 பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.