மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் மியன்மார் நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் பங்கேற்றுள்ளார்.
69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹொலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது.
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரபஞ்ச அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் பங்கேற்றார்.
இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்றார். அப்போது, அழகி போட்டி நடைபெறும் மேடையில் துசர் விண்ட் லவின் தனது கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் ’மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
மியான்மர் நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் இராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் இராணுவம் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறையை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், உலக நாடுகள் தங்களுக்கு உதவவேண்டும் என்பதற்காகவே பிரபஞ்ச அழகி போட்டியில் ’மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற பதாகையுடன் துசர் விண்ட் லவின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.