ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2021/2022 ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான புதிய ஒப்பந்தத்தில் நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா இருவரும் மாத்திரம் ஏ1 பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அணித்தலைவர்களான எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ன ஆகிய மூவரும் தரமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை கருத்திற்கொண்டு தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான 2021/2022 ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான புதிய ஒப்பந்தத்தை, அரவிந்த டி சில்வா தலைமையிலான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவினர் தயாரித்திருந்தனர்.
இதன்படி ஏ1, ஏ2,ஏ3, பீ1, பீ2, பீ3,சீ1,சீ2,சீ3, டி1,டி2,டி3 ஆகிய 12 பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா ஏ1 பிரிவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எஞ்சலோ மெத்தியூஸ் ஏ 2 எனும் பிரிவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரிவின் வருடாந்த தொகையாக 80 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் மெத்தியூஸுக்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருடத்துக்கு கிடைக்கப்பெற்றது. இதன்படி அவருக்கு கடந்த வருடத்தைக் காட்டிலும் 50 ஆயிரம் டொலர்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் திமுத் கருணாரட்ண ஏ3 எனும் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், புதிய ஒப்பந்தத்தின்படி அவருக்கு கிடைக்கும் வருடாந்த தொகை 70 ஆயிரம் அமெரிக்க டொலராகும். கடந்த வருட ஒப்பந்தத்தில் இவர் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பெற்றிருந்தார்.
சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரன சுரங்க லக்மால் பீ1 பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய ஒப்பந்தத்தில் அவருக்கு 65 ஆயிரம் ரூபா டொலர் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி அவருக்கு கடந்த வருடத்தைக் காட்டிலும் 45 ஆயிரம் டொலர்கள் குறைவாக கிடைக்கவுள்ளது.
சீ2 பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமாலுக்க இவ்வருடம் 45 ஆயிரம் ரூபா டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளரான கசுன் ரஜித்த சீ1 பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வருடத்துக்கு 50 ஆயிரம் டொலர் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலாமாக நடைபெற்ற போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட தனுஷ்க குணதிலக்க புதிய ஒப்பந்தத்தின்படி டி2 பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,வருடத்துக்கு 30 ஆயிரம் டொலருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.