நச்சு ஊசி விவகாரம்! திருப்தியளிக்காவிடின் சர்வதேசத்தை நாடலாம்! அரசாங்கம்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுத்தருமாறு வட மாகாண சுகாதார அமைச்சரிடம் கோரியுள்ளேன்.
அவரின் அறிக்கை கிடைத்ததும் முன்னாள் போராளிகளுக்கு வைத்தியப் பரிசோதனை நடத்தி அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
முதலில் உள்நாட்டு மருத்துவர்களைக்கொண்டு பரிசோதனை செய்வோம். அது வெற்றியளிக்காவிடின் சர்வதேச மருத்துவர்களைக்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து ஆராயலாம் எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதாவது முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன. மற்றுமொரு முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.
அரசாங்கம் இது தொடர்பில் என்ன செய்யப்போகின்றது? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளி்க்கையில்கடந்த நான்காம் திகதி கொழுமபில் நான் மாகாண சுகாதார அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.
இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் முழுமையான அறிக்கை அறிக்கை ஒன்றை பெற்றுத்தருமாறு வட மாகாண சுகாதார அமைச்சரிடம் கோரியுள்ளேன்.
அவரின் அறிக்கை கிடைத்ததும் முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் விசேட சிகிச்சை அளிக்கப்படவேண்டுமாயின் அதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
கேள்வி – சர்வதேச தரத்திலான மருத்துவ பரிசோதனை செய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே?
பதில் – முதலில் உள்நாட்டு மருத்துவர்களைக்கொண்டு பரிசோதனை செய்வோம். எம்மிடம் சர்வதேச தரத்திலான மரத்துவர்கள் உள்ளனர். அது வெற்றியளிக்காவிடின் சர்வதேச மருத்துவர்களைக்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்வது குறித்து ஆராயலாம் என்றார்.