அரசுடமையாக்கப்பட்ட ராஜபக்சவினருடைய பணமும், காணியும்!
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டிருந்த 157.5 மில்லியன் ரூபா பணம் அரசுடமையாக்கப்பட்டமையானது முக்கியமான சம்பவம் என பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒழுங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கடுவலையில் உள்ள 18 ஏக்கர் நிலம் மற்றும் மாத்தறை பிரவுண்சில் பிரதேசத்தில் காணி மற்றும் கட்டிடங்களை அரசுடமையாக்கியதும் முக்கியமானது.
அதேபோல் சீ.எஸ்.என். நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜபக்சவினர் அல்ல என்பதும் அரசுடமையாக்கப்பட்ட பணம் அவர்களுடையது அல்ல என முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரம் உண்மைக்கு புறம்பானது.
அதேபோல் இந்த நிதி மோசடி சம்பந்தமான விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை மாத்திரமல்ல உரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள், காணாமல் போகச்செய்த சம்பவங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் குறித்தும் சரியான விசாரணைகளை ஆரம்பித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.