கனடாவில் ஈழத்தமிழர்களின் குடியேற்றம் ஆரம்பித்து 30 வருடங்கள் பூர்த்தி
ஓகஸ்ட் 11ஆம் திகதியாகிய இன்று (வியாழக்கிழமை) 155 தமிழ் அகதிகள் கனடாவில் காலடி எடுத்து வைத்து 30 வருடங்கள் பூர்த்தியாகின்றது. எனவே ஈழத்தமிழர்கள் தமது கனடா குடியமர்வை ஆரம்பித்த இந்த நாளை மிக முக்கிய தினமாகக் கருதுகின்றனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவு கூறும் முகமாகவும், கொண்டாடும் முகமாகவும் கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நியூபவுண்லாந்திலும், ரொறன்ரோவிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
குறிப்பாக 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நியூபவுண்லாந்து மாநிலத்தின் சென்.சோர்ட்ஸ் நகரில் ‘தமிழ் பயணம் 1986′ சிறப்பு நிகழ்வாக ஒரு மாபெரும் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ‘தமிழ் பயணம் 1986′ குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்ட திரையிடலும் இடம்பெறும். இதன்போது தமிழர்களைக் காப்பாற்றிய கப்பல் கப்ரினுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும். மேலும் அங்கு ஒரு நினைவு நடுகல் இடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1986ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மூன்று உள்ளூர் மீன்பிடிப் படகுகளில் சென்ற சுமார் 155 தமிழர்கள் நியூபவுண்லாந்து நகரின் சென்.சோர்ட்ஸ் கடற்கரையை அடைந்தனர். அன்றிலிருந்து தமிழர்களின் கனேடியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது கனடாவில் பல துறைகளிலும் உயர்ந்த இடங்களில் உள்ள ஈழத்தமிழர்கள், கனடா அரசியலிலும் முக்கிய பதவிகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.