ஒலிம்பிக் டென்னிஸ்: சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றில் சானியா, போபண்ணா ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஜான் பியர்ஸ் ஜோடியை சந்தித்தது.
1 மணிநேரம் 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அவுஸ்திரேலியா ஜோடியை வென்று காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி, பிரித்தானியாவின் ஹீத்தர் வாட்சன், ஆண்டி முரே ஜோடியுடன் மோதுகிறது.
முன்னதாக, ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றினர்.
தற்போது கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ள சானியா, போபண்ணா ஜோடி பதக்கம் வெல்லும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.