பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ’லிட்டில் மாஸ்டர்’ ஹனீப் முகமது மரணம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹனீப் முகமது (81) உடல்நிலை கோளாறு காரணமாக இன்று கராச்சியில் மரணமடைந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ’லிட்டில் மாஸ்டர்’ என்று வர்ணிக்கப்படும் ஹனீப் முகமது கிரிக்கெட்டை ஒரு கலக்கு கலக்கியவர். தற்போது வரை கூட இவரது திறமைக்கு சமமான துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை என்றே கூறலாம்.
கடந்த 1957, 1958ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இவர் எடுத்த 337 ஓட்டங்கள் சாதனையை இதுவரை பாகிஸ்தான் வீரர்கள் யாராலும் முறியடிக்க முடியவில்லை.
இவருக்கு கடந்த 2013ல் நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹனீப் முகமதுவுக்கு கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இன்று பிரிந்தது. முகமது மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக இவர் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3915 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதம் அடங்கும்.