ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ள நான்கு மாத காலத்துக்கான இடைக்காலக் கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இடைக்காலக் கணக்கறிக்கை தொடர்பான இரு நாள் நாடாளுமன்ற விவாதம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. நாளை மாலை சபையில் இடைக்காலக் கணக்கறிக்கையை நிறைவேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளமையால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரைக்கான இடைக்காலக் கணக்கறிக்கையை உருவாக்க அமைச்சரவைக் கன்னிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்வரும் நான்குமாத காலத்துக்குத் தேவையான இடைக்காலக் கணக்கறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளது. இந்த இடைக்காலக் கணக்கறிக்கையின் முழு செலவீனம் 1,747.68 பில்லியன் ரூபா நிதியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.