இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த புனித சூசையப்பர் – புனித பேதுருவானவர் அணிகளுக்கு இடையிலான 88 ஆவது புனிதர்களின் சமர் பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டிக்கான அனுசரணை ஆவணத்தை புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரஞ்சித் அண்ட்ராடி அடிகளார், புனித பேதுருவானவர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரோஹித்த ரொட்றிகோ அடிகளார் ஆகியோரிடம் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் பொது ஆலோசகர் மற்றும் உதவித் தலைவர் ட்ரினேஷ் பெர்னாண்டோ வழங்கினார்.
இந்த இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி அருட்தந்தை மொரிஸ் ஜே. லா கொக் கிண்ணத்துக்காக நடைபெறவுள்ளது.
போட்டியில் முடிவு கிட்டவேண்டும் என்பதற்காக ‘புனிதர்களின் சமர்’ கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் இரண்டு அணிகளுக்கும் 60 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அது போட்டித்தன்மைக்கு பெயர்பெற்றுள்ளது.
மெற்கிந்தியத் தீவுகளில் இந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு பாடசாலை அணிகளுக்கு தலைவர்களாக விளையாடுகின்றமை விசேட அம்சமாகும்;.
புனித சூசையப்பர் அணிக்கு ஷெவொன் டெனியலும் புனித பேதுருவானவர் அணிக்கு வனுஜ சஹான் குமாரவும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.
அத்துடன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணிக்கு தலைவராக விளையாடியவரும் சிரேஷ்ட தேசிய அணியில் அண்மையில் அறிமுகமான துனித் வெல்லாலகேயும் இந்த வருட மாபெரும் கிரிக்கெட் போட்டியில் தனது பாடசாலைக்காக கடைசியாக விளையாடவுள்ளார்.
துனித் வெல்லாலகே கடந்த வருடம் புனித சூசையப்பர் அணியின் தலைவராக இருந்தார். அர்ஜுன ரணதுங்க (ஆனந்த), ருமெஷ் ரட்நாயக்க (புனித பேதுருவானவர்) ஆகியோருக்கு பின்னர் ஒரே பருவத்தில் தேசிய அணிக்கும் பாடசாலைக்கும் விளையாடும் பெருமையை துனித் வெல்லாலகே பெறுவதுடன் சகலதுறை ஆட்டக்காரரான இவர் புனித சூசையப்பர் அணியில் துரும்புச் சீட்டாக இடம்பெறவுள்ளார்.
இந்த வருடம் புனித சூசையப்பர் அணி பலம் வாய்ந்த அணியாகத் தென்படுவதால் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாகத் தென்படுகிறது.
எனினும் புனிதர்களின் சமர் என்று வந்துவிட்டால் இரண்டு அணிகளினதும் வீரர்களும் ஆக்ரோஷத்துடன் வைராக்கியத்துடனும் விளையாடுவதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 87 ‘புனிதர்களின் சமர்’ கிரிக்கெட்டில் 12 – 10 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் புனித சூசையப்பர் முன்னிலையில் இருக்கிறது.
புனித சூசையப்பர் கடைசியாக 2008இல் ருவன்த பெர்னாண்டோபுள்ளே தலைமையிலும் புனித பேதுருவானவர் கடைசியாக 2016இல் வினு மொஹோட்டி தலைமையிலும் வெற்றிபெற்றிருந்தன.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்
இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலான அருட்தந்தை பீட்டர் ஏ. பிள்ளை ஞாபகார்த்த கிண்ண மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்துள்ள 47 போட்டிகளில் 24 – 20 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் புனித சூசையப்பர் முன்னிலை வகிக்கின்றது. 3 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை. கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் புனித சூசையப்பர் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது.
இந்த இரண்டு பாடசாலைகளும் அதிசிறந்த தேசிய கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கியுள்ளன.
இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, ஏஷ்லி டி சில்வா, மைக்கல் வெண்டர்ட், ரொஷேன் சில்வா, சதீர சமரவிக்ரம இப்போது துனித் வெல்லாலகே ஆகியோர் புனித சூசையப்பர் கல்லூரி உருவாக்கிய தேசிய வீரர்களாவர்.
ரோய் டயஸ், ருமேஷ் ரட்நாயக்க, வினோதன் ஜோன், அமல் சில்வா, ரசல் ஆர்னல்ட், கௌஷால் லொக்குஆராச்சி, மலிந்த வர்ணபுர, ஏஞ்சலோ பெரேரா, ஜனித் லியனகே, ஆகியோர் புனித பேதுருவானவர் கல்லூரியிலிருந்து உருவான தேசிய வீரர்களாவர்.
இவ்வருடப் போட்டிக்கு டயலொக் ஆசிஆட்டா பிரதான அனுசரணை வழங்குகின்றது.
நாட்டில் மோசமான சூழ்நிலைக்கு வழிவகுத்த முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் காரணமாக புனிதர்களின் கிரிக்கெட் சமர் மூடிய அரங்குக்குள் இந்த வருடம் நடத்தப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ஜோ – பீட் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும்.
இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியும் டயலொக் தொலைக்காட்சி அலைவரிசை எண் 140இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். அத்துடன் திபப்பரே.கொம் மற்றும் டயலொக் ஏiரு யிpஇலும் நேரலை செய்யப்படும்.
அணிகள்
புனித சூயைசப்பர்: ஷெவொன் டெனியல் (தலைவர்), சந்தேஷ் ஜயவர்தன (உதவித் தலைவர்), துனித் வெல்லாலகே, ஹிருன் கப்புருபண்டார, தேஷான் செனவிரட்ன, அவின்த டி அல்விஸ், யெனுல தேவ்துச, ககன சமோத், ஷெனுக் சேரசிங்க, லஹிரு அமரசேகர, கெனெத் லியனகே, செனோத் சொய்சா, சஹான் தாபரே, ஹிரான் ஜயசுந்தர, மித்திர தேனுர, நரேன் முரளிதரன், கவென் பத்திரண, முடித்த லக்ஷான், ரிஷ்ம அமரசிங்க, அபிஷேக் ஜயவீர.
புனித பேதுருவானர்: வனுஜ குமார (தலைவர்), லஹிரு தெவட்டகே (உதவித் தலைவர்), தனல் ஹேமானந்த, விஷேன் ஹலம்பகே, நிமன் உமேஷ், சன்ஷே குணதிலக்க, நிமுத்து குணவர்தன, லகிந்து சச்சின், ருசாந்த கமகே, ஷெனால் பொத்தேஜு, ஷெனன் ரொட்றிகோ, லக்ஷ்மிக்க பெரேரா, அபிலாஷ் வெல்லாலகே, திலின தம்சர, இஷிர அயுபால, சலித் கால்லகே.